சுகாதார திணைக்களமும் கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
உலக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடுசெய்த மாணவர்களின் சித்திரக்கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் இன்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பல்வைத்திய பிரிவின் பொறுப்பதிகாரி பல்வைத்திய நிபுணர் கோகுலரமணனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவிராஜா உட்பட வைத்தியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் ஏற்படும் தவறான பழக்கங்களினால் வாய்ப்புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும் சமூகத்தில் காணப்படும் தவறான பழக்கவழக்கங்களினால் ஏற்படும் புற்றுநோய்களிலிருந்து பாதுப்பதற்கான முன்கொண்டுசெல்லப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் மாணவர்கள் மத்தியிலிருந்து சமூகத்திற்கான தகவல்களை கொண்டுசெல்லும் வகையில் பல்வேறு சித்திரப்போட்டிகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் புகையிலைப்பொருட்கள் பாவனை தொடர்பான செயற்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இங்கு கருத்து தெரிவித்த சுஜாதா குலேந்திரகுமார்,
நாடுகளில் முக்;கிய துறையாக கல்வித்துறையும் சுகாதாரத்;துறையும் சேவையாற்றிவருவதை நாங்கள் அறிவோம்.அந்தவகையில் இலங்கையிலும் மிகப்பெரும் துறைகளாக கல்வி மற்றும் சுகாதாரதுறை காணப்படுகின்றது. இந்த இரண்டு துறையும் மாணவர்களுக்கு எதிர்கால சந்ததியினருக்கு தங்களால் முடிந்த சேவையினை வழங்கிவருகின்றனர்.
எப்போதும் ஆரோக்கியமான ஆலோசனைகளை கூறி மாணவர்களை ஆசிரியர்களை வழிப்படுத்துவதன்மூலமாக சிறந்த சுகாதார துறையினை கட்டியெழுப்பமுடியும்.சமூகத்திற்கு இவ்வாறான விழிப்புணர்வு செய்திகளை கொண்டுசெல்வதற்கு மாணவர்கள் சிறந்த ஊடகமாக இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.சிறந்த ஆளுமையுள்ள ஆரோக்கியமான சமூகம் ஒன்றை மாணவர்கள் ஊடாக கட்டியெழுப்பமுடியும் என்ற பல திட்டங்கள் எங்களிடம் முன்வைக்கப்பட்டபோது நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு கல்வி மற்றும் சுகாதார திணைக்களம் இணைந்து சமூக நலனுக்காக பணியாற்றிவருகின்றோம்.
கிழக்கு மாகாணம் புதிய இரண்டு தலைமைகளின் கீழ் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளவிருக்கின்றது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வலய கல்வி பணிப்பாளர்களும் சுகாதார திணைக்களத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற எந்தவொரு மாணவர்களும் சிறந்த ஆரோக்கியமுள்ளவர்களாக சிறந்த கல்விமான்களாக உருவாக்கமுடியும்.
இன்றைய காலத்தில் மாணவர்களின் உணவுப்பழக்கவழங்கங்களை நாங்கள் முயற்சிசெய்தும் முடியாதநிலையில் உள்ளது.சிறுவர்கள் அடிக்கடிநோய்களுக்குள்ளாகி இறக்கும் நிலைகள் ஏற்படுகின்றது.
இந்த சுகாதார திணைக்களம் ஊடாக சிறந்த உணவுப்பழக்க வழங்கங்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
















