
ஏழு கட்சியாக சேர்ந்திருந்தாலும் அவர்களினால் ஒரு ஆசனத்தையே பெறமுடிந்தது.ஒரு கட்சியாக போட்டியிட்ட இலங்கை தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப்பெற்றுள்ளது.கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, கட்சிகளுக்கு கிடைக்கப்பெறும் வாக்குப்பலமே முக்கியமானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
ரில்வின் சில்வா அவர்கள் 13வது திருத்த சட்டம் மாகாணசபை முறைமைகள் நீக்கப்படவேண்டும் என்று கூறுகின்றார்.ஜனாதிபதி கூறுகின்றார் மாகாணசபை தேர்தல் நடைபெறும்,மாகாணசபை முறையில் எந்த அதிகாரமும் குறைக்கப்படாது என்று.அதேபோன்று அதிகாரம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற கருத்தினையும் அவர் தெரிவித்திருந்தார்.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பதன் அடிப்படையில் அவரது கருத்து உண்மையான கருத்தாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கடந்த வாரம் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எமது பாராளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுடனான சந்திப்பினையும் மேற்கொண்டிருந்தோம். இதன் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்சனை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம். அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டது. அதில் முக்கியமாக மயிலத்தமடு மாதவணை பண்;ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணி தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம். நீதிமன்றத்;தின் கட்டளைகளை மீறி இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சற்தரையில்லாத நிலையில் அவஸ்தைக்குள்ளாகியுள்ளமை பற்றித் தெளிவுபடுத்தியுள்ளோம். மேலும்;, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அதனூடாகக் கைது செய்யப்பட்;டுள்ள அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.
அதுமட்டுமல்லாது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மூலமாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் எம்மால் சொல்லப்பட்டதுடன், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி குன்றிக் காணப்படும் விடயம் பற்றியும் கூறியிருந்தோம். இதன் நிமித்தம் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயங்களை ஜனாதிபதி நுணுக்கமாகவும், அவதானமாகவும் செவிமடுத்தார். இதில் இனப்பிரச்சனை தீர்வு என்ற விடயத்தில் அவர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கின்றார்கள். அந்த திருத்தம் வரும்போது எம்மால் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திற் கொள்வதோடு தென்னிலங்கை மக்களும் இந்த விடயத்தில் குழப்பம் அடையாத விதத்தில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாக இருப்பினும் கடந்த காலங்களில் நாங்கள் தென்னிலங்கைத் தலைவர்களிடம் எமது இனப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஏமாற்றப்பட்டிருந்தோம். எனவே இவரும் ஒரு தென்னிலங்கைத் தலைவர் என்ற அடிப்படையில் இதற்கான செயற்பாடுகள் இடம்பெறும்போது தான் ஒரு நம்பகத்தன்மையை உணர முடியும்.
அத்துடன் அரசியற்பேரவை உறுப்பினராக எமது பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயர்மட்ட பதவிகளைத் தெரிவு செய்யும் போது அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது பற்றி முடிவுகளை தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இந்த அரசியற் பேரவைக்கு இருக்கின்றது. இதன்போது சிறுபான்மை அல்லது தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்த சிபாரிசுகளுக்கு ஆதரவு கொடுப்பதா இல்;லைய என்ற விடயங்களையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் எமது கட்சி மூன்றாவது நிலையில் இருக்கின்றது. அசுரப் பெரும்பான்மையோடு இருந்த கட்சி இன்று மூன்றே மூன்று ஆசனங்களையும். மூன்று ஆசனங்களோடு இருந்தவர்கள் இன்று 159 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றனர். இந்த மாற்றம் என்பது ஒரு தலைகீழான மாற்றமாவே அமைந்திருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றைப் பொருத்தமட்டில் அரசியல் அதிகாரத்தில் இடதுசாரிக் கட்சியொன்று இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இவர்கள் மாற்றத்தைச் செய்யப் போகின்றோம் என்கின்றார்கள் அதனைப் பொருத்திருந்;துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை தமிழரசுக்கட்சி ஒற்றுமையினை விரும்புகின்ற கட்சி.கடந்த உள்ளுராட்சி தேர்தல்காலத்தில் மாத்திரம்தான் நாங்கள் பிரிந்துசெயற்படுகின்றோம் என்ற விடயத்தினை சொல்லியிருந்தோம்.பாராளுமன்ற தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் நாங்கள் இணைந்துசெயற்படுவோம் என்று கூறியிருந்தோம்.அதற்குள் அவசரப்பட்டுச்சென்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியிருந்தார்கள்.
அதனை உருவாக்கிய பின்னர் நாங்கள் ஏழு கட்சியை இணைத்து இதனை உருவாக்கியுள்ளோம் நீங்கள் ஒரு கட்சியாகவுள்ளதனால் நீங்கள்தான் எங்களுடன் இணைந்துகொள்ளவேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தார்கள்.அவ்வாறு அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்துசெயற்படுவோம் என்ற கருத்தினை நாங்கள் தெரிவித்தபோதிலும் இல்லை நாங்கள் ஏழு கட்சிகள் இணைந்துள்ள நிலையில் நீங்கள் ஒரு கட்சிதான் எங்களுடன் வந்து இணையுங்கள் என்று கூறினார்கள்.
இந்த தேர்தல்முடிந்த பின்னர் உண்மையினை பார்க்கின்றபோது ஏழு கட்சியாக சேர்ந்திருந்தாலும் அவர்களினால் ஒரு ஆசனத்தையே பெறமுடிந்தது.ஒரு கட்சியாக போட்டியிட்ட இலங்கை தமிழரசுக்கட்சி எட்டு ஆசனங்களைப்பெற்றுள்ளது.கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, கட்சிகளுக்கு கிடைக்கப்பெறும் வாக்குப்பலமே முக்கியமானது.இதனை அவர்கள் ஓரளவு தெளிவாக உணர்ந்திருப்பார்கள்.இனிவரும் காலங்களில் தமிழரசுக்கட்சி கூடிய கருத்துகளை பரிமாறி முடிவுகளை எடுக்கும்போது அவர்களும் தெளிவான நிலைக்கு வரவேண்டும்.நிபந்தனைகளை விதிப்பதும்,ஏழுகட்சிகளுடன் எட்டாவதாக இணையுமாறு நிபந்தனைகள் விதிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அல்ல.வாக்குப்பலத்தின் அடிப்படையிலேயே எந்தக்கட்சி எந்தகட்சியுடன் இணையவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.விடக்கண்டன் தொடாதக்கண்டன் என்று சிந்திக்காமல்,பெரிது சிறிது என்று சிந்திக்காமல் சரியாக சிந்தித்தால் அனைத்தும் சரியாகவரும்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல்,மாகாணசபை தேர்தல்கள் என்பது வித்தியாசமானது.அந்த தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து செயற்படுவதே பொருத்தமாகயிருக்கும்.பேரினவாதபோக்குடைய தென்னிலங்கை கட்சிகள் பெரும்பாலும் தமிழ் தேசிய உணர்வுகளை விளங்கிக்கொள்ளும் தன்மையென்பது குறைவாகவே காணப்படும்.தற்போதுள்ள இடதுசாரிகள் கட்சியான தேசிய மக்கள் சக்தியைப்பொறுத்த வரையில் மதவாதம்,இனவாதம் இல்லாத கட்சி என்று கூறினாலும்கூட எமது பிரச்சினைகள் தீர்ந்தால்தான் அதனை நம்பமுடியும்.தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதன்மூலம் எதிர்காலத்தில் தென்னிலங்கை கட்சிகளின் ஆதரவில்லாமலே ஆட்சிகளை அமைக்கமுடியும்.இருந்தபோதிலும் ஜனாதிபதி தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் தேசிய மக்கள் செலுத்திய தாக்கமானது உள்ளுராட்சிமன்ற,மாகாணசபை தேர்தலிலும் இருக்கலாம்.எனவே தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டுதான் இந்த சவாலைமுறியடிக்கவேண்டிய நிலையுள்ளது.
ரில்வின் சில்வா அவர்கள் 13வது திருத்த சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.ஜனாதிபதியை பொறுத்த வரையில் அவர் அவ்வாறு கூறவில்லை.வழக்கமாகயிருக்கும் 13வது திருத்த சட்டம் நடைமுறையிலிருக்கும் என்று கூறியிருந்தார்.மாகாணசபைமுறையில் எந்த அதிகாரமும் குறைக்கப்படமாட்டாது என சொல்லியிருந்தார். ரில்வின் சில்வாவின் கருத்துக்கும் ஜனாதிபதியின் கருத்துக்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
ரில்வின் சில்வா அவர்கள் 13வது திருத்த சட்டம் மாகாணசபை முறைமைகள் நீக்கப்படவேண்டும் என்று கூறுகின்றார்.ஜனாதிபதி கூறுகின்றார் மாகாணசபை தேர்தல் நடைபெறும்,மாகாணசபை முறையில் எந்த அதிகாரமும் குறைக்கப்படாது என்று.அதேபோன்று அதிகாரம் அதிகரிக்கப்படமாட்டாது என்ற கருத்தினையும் அவர் தெரிவித்திருந்தார்.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்பதன் அடிப்படையில் அவரது கருத்து உண்மையான கருத்தாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.