மட்டக்களப்பில் “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் – செயற்திறனான முதுமைப் பருவம்” எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்று உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து முதியோர்களுக்கான ஒரு நாள் செயலமர்வை நடாத்தினர்.அரச, அரச சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் பிரிவுகளில் தொழில் புரியும் அலுவலர்கள் ஓய்வுக்குத் தயாராகும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைத்தல் சமூகமயமாதல் மற்றும் முதுமைப் படுவத்தினை செயற்றிறனாக எதிர் கொள்ளுதல் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்ட செயலமர்வாக இது அமைந்திருந்தது.
மாவட்டத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றி ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியத்தியத்திற்கு தயாராகும் தெரிவு செய்யப்பட்ட அலுவலகங்களுக்கான ஓய்வூதிய காலத்தில் உடலியல்- உளவியல் நலம், ETF, EPF பெற்றுக் கொள்வதற்கான சுய கோவை தயார்படுத்தல், திட்டமிடப்பட்ட முதுமைப்பருவம் தொடர்பான தெளிவூட்டல்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.சிறிதரன், தொழிற்துறை உத்தியோகத்தர் கே. கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான திருமதி துஷியந்தி, திருமதி தட்ஷாயினி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோனேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.







