மேசைகளில் இருந்து நிர்வாகம் செய்யாமல் மக்களின் காலடிக்கு சென்று சேவைசெய்யவே நான் என்றும் விரும்புகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.
” கிளின் சிறிலங்கா ” கருத்திட்டத்தினை செயற்படுத்துதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் ஊடாக விரிவான மாற்றப்பட்ட செயன்முறை ஒன்றின் மூலம் மேம்பட்ட சமூகம் ஒன்றினை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் ” கிளின் சிறிலங்கா ” கருத்திட்டம் கடந்த 01.01.2025 திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி கருத்திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமே ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் ஐனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஏ.கவிதா தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இலங்கையின் தேசிய கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசிய திட்டமாகிய இத்திட்டத்தின் அரச உயர் அதிகாரிகளை தொளிவுபடுத்தும் குறித்த விசேட செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சனி ஶ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஏனைய அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
அண்மையில் நடைபெற்ற கிளினிங் சிறிலங்கா கூட்டத்தின்போது ஜனாதிபதியின் செயலாளர் அவர்கள் பேசும்போது கூறினார் 1948ஆம் ஆண்டு தொடக்கம் ஆங்கிலேயர்களினால் கொண்டுவரப்பட்டமே உள்ளதாகவும் அவர்கள் அவர்களது நாட்டில் சட்டங்களில் எத்தனையோ மாற்றங்களை செய்துள்ளபோதிலும் நாங்கள் அந்த பழைய சட்டத்துடனேயே உள்ளதாக இருக்கின்றோம்.காணி சீர்திருத்த சட்டமும் காணி அதிகார சட்டங்கள் கூட 70வருடத்திற்கு முற்பட்ட பழைய சட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.இக்காலத்திற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாற்றப்படவில்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தியே சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாங்கள் இருக்கின்ற விடயங்களை சரியாக செய்யப்போகின்றோம்.இந்த கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டம் அல்ல.இருக்கின்றவற்றை சரியான முறையில் செய்யப்போகின்றோம்.பலருக்கு 8.30மணிக்கு அலுவலகத்திற்கு வருகைதரவேண்டும் என்பதே மறந்துபோயிவிட்டது.நான் இந்த மாவட்ட செயலகத்திற்கு 8.30க்கு கடமையை பொறுப்பேற்க வருகைதரயிருந்தபோது ஒருவர் தொலைபேசியில் சொன்னார் பிந்தி வாருங்கள் என்று.வருட முதல்நாளில் கடமையினை நேரத்திற்கு ஆரம்பிக்க எண்ணியபோது9,10மணி என்ற வகையில் செயற்பட்டாளர்கள்.ஆனால் ஜனாதிபதியின் கிளின் சிறிலங்கா திட்டம் நேரடியாக 8.30மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்றதும் அந்தவேளையில் அன்றைய நிகழ்வினை ஆரம்பித்தது மகிழ்ச்சியாகயிருந்தது.
இருப்பதை நாங்கள் சரியாக கடைப்பிடிக்கவேண்டும்.தற்போது சில அதிகாரிகள் கடிதம் எழுதிவிட்டு அது தொடர்பில் என்ன முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றது என்பது தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றனர்.இன்று பல நவீன வசதிகள் உள்ளன.அவற்றினை பயன்படுத்தாமல் உயர்அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிவிட்டு தமது வேலைகளை பார்க்கின்றனர்.அதனாலும் சேவைகளை பெற்றுக்கொள்வது தாமதமடைகின்றது.சில உத்தியோகத்தர்கள் சிறந்த முறையில் கடமையாற்றுகின்றார்கள்.
ஒரு அரச உத்தியோகத்தர் ஒரு இடத்தில் ஐந்து வருடங்கள் கடமையாற்றமுடியும் என்றபோதிலும் சிலர் ஏழு வருடங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரையில் கடமையாற்றுகின்றனர். மக்கள் சேவையானது மேசையிலிருந்து சேவையாற்றுவதை விட இறங்கிச்சென்று மக்களுக்கு சேவையாற்றுவதையே நான் விரும்புகின்றேன்.அதுவே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.மக்கள் அலைக்கழிக்கப்படாமல் சேவைகளை வழங்கவேண்டும்.







