மட்டக்களப்பு புனித மரியால் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்ததுடன் சிவஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள்,அருட்தந்தை க.ஜெகதாஸ் அடிகளார் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டதுறை ஓய்வுநிலை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் கூட்டாட்சிக் கோட்பாடும் சுயாட்சி வடிவங்களும் என்னும் தலைப்பில் நினைவுப்பேருரையாற்றினார்.














