சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக இலங்கையின் கரையோரப் பிரதேசமெங்கும் இன்று(26) நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நினைவூத் தூபியில் உயிர் நீத்த 472 உறவுகளின் நினைவு அஞ்சலி இன்று (26) காலை 10 மணியலவில் உறவுகளால் அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் விளையாட்டு கழக அங்கத்தவர்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இங்கே கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் உரையாற்றும்போது, கடந்த சுனாமி பேரலையின்போது கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட உயிர்கள் இப்பிரதேசத்தில் இழக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டிலே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ருக்கின்றது. உண்மையாக அந்த வேதனை 20 ஆண்டுகள் கழிந்தும் கூட எங்கள் மனதை விட்டு அகலாத ஒன்றாக இருக்கின்றது.
எங்களது உறவுகளை நினைத்து 20 ஆண்டுகள் கடந்தபோதும் இன்றும் நாங்கள் அவர்களுடைய கனவுகளை சுமந்தவர்களாக, துக்கத்திலே பங்கு கொண்டிருக்கின்றோம். அவர்களின் நினைவாக இங்கு வந்திருக்கின்ற எங்களது உறவுகள் அனைவரும் அவர்களது நினைவுகளோடு இங்கே நினைவு கூர்ந்த வண்ணம் இருக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்திலேயே இவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்றும் கூறினார்.