முன்னர் பதவி வைகித்த அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சராகவும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், சிவனேசதுரை சந்திரகாந்தன் இருந்து கொண்டு எனக்கு அவருக்குரிய சிறப்புரிமையையும் பாவித்து பாராளுமன்றத்திற்குள்ளும் அவருக்கு இருக்கின்ற அரசியல் செல்வாக்கை பாவித்து பாராளுமன்றத்திற்கு வெளியிலும் தொடர்ச்சியாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தன.
என காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிவனேசதுரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவர் களுவாஞ்விகுடி நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு வெள்ளிக்கிழமை(10.01.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் நான் அவ்வப்போது பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்திருந்தேன். குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பாக அதாவது என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், அவ்வாறு செல்லாது இருந்தால் அங்கு போவேன், இங்கு போவேன், என கூறினால் இது கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கம் இதில் என்ன நடக்கும் என தெரியும்தானே. நான் உன்னை கௌரவமாக அனுப்ப வேண்டும் என நினைக்கின்றேன் இல்லையேல் நீ அவமானப்பட்டு போக வேண்டி வரும் என என்னை அவர் எச்சரித்து அச்சுறுத்தி இருந்தார்.
அது மாத்திரமன்றி அவருடன் சேர்ந்த இன்னும் இருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய செயற்பாடுகளுக்கு என்னை ஒத்துப் போகுமாறும் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும் எனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். அது தொடர்பான ஒலி பதிவுகள் அனைத்தும் நான் பொலிசாருக்கு ஒப்படைத்து இருக்கின்றேன். இந்த வழக்குத் தொடர்பில் பொலிசாரினால் எனக்கு கடிதம் தரப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்திலேயே குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரை பொலிசார் தொடர்பு கொள்வதாகவும் ஆனால் அவர் வாக்குமூலம் வழங்குவதற்கு முடியாமல் இருப்பதாகவும் அது சம்பந்தமாக நீதிமன்றத்திலேயே அறிக்கிடப்பட்டுள்ளதாகவும் பொலிசார் என்னிடம் தெரிவித்தனர்.