எங்களது உறவுகளைக்கொண்டுசென்றவர்களை எங்களுக்கு தெரியும்.சாட்சியங்களாகவே பல வருடங்களாக வீதிகளில் நின்று போராடிவருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு வடகிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவன ஈர்ப்பு பேரணி மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவிலிருந்து காந்தி பூங்காவரையில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது.
இந்த பேரணியானது காந்திபூங்காவினை வந்தடைந்ததும் அங்கு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய இந்த போராட்டமானது மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்;,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உள்ளக பொறிமுறைவேண்டாம்,சர்வதேச நீதிவேண்டும்,எமது பிள்ளைகள் எங்கே எங்கே, திசைகாட்டி அரசே திசைமாறாதே, சர்வதேச நீதியைப்பெற்றுக்கொடு,போர்க்குற்றவாளிகளை விசாரணைசெய்,எமது உறவுகளுக்கு நீதிவேண்டும்,குற்றவாளிகளை பாதுகாக்காதே போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது தண்டனையின்மைக்கு மத்தியிலான உறுதி:வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டமைப்பான உண்மைக்கும் நீதிக்குமான போராட்டம் என்னும் தலைப்பிலான நூல் ஒன்றும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இதன்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் சர்வதேச சமூகத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையும் இதன்போது அமைப்பின் செயலாளர் திருமதி சுகந்தியினால் வாசிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் அறுநூறுக்கும் மேற்பட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது பெருளமவான பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்ததுடன் புலனாய்வாளர்களினால் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.


























