மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் அரிசி தட்டுப்பாடு – Special report Batti360
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிகும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நாம் இன்றுஆராய்ந்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட நாம் குறித்த அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வர்த்தக நிலையங்கள் , அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசியை கொள்வனவு செய்வோர் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குறித்த பிரச்சினை தொடர்பாக வினவியதுடன் அது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.
இது தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளர்களை நாம் சந்தித்த போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.
“இங்கு அரிசிக்கு மிகவும் தட்டுப்பாடாக உள்ளது, கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாத நிலைமையில் நாம் உள்ளோம், நாட்டு அரிசி , பச்சை அரிசி மிகவும் தட்டுப்பாடு – அதுவும் குறிப்பிட்ட விலைக்கு கிடைப்பதில்லை, சம்பா அரிசியும் தட்டுப்பாடு மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த மூன்று அரிசியும் அதிகமாக தட்டுப்பாடாக உள்ளது. அரிசிகளை பதுக்கி விட்டு அரிசிக்கு விலை கூட்டுவதற்காக இந்த செயற்பாட்டை முன்னெடுக்கின்றனரா? அல்லது உண்மையாகவே அரிசிக்கு தட்டுப்பாடா? என்பது எமக்கு தெளிவில்லை” என்கின்றார் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஒரு வர்த்தகர்.
இது தொடர்பாக பொதுமக்கள் அதாவது நுகர்வோரின் நாம் கேட்டறிந்த போது. “நாம் இங்கு அரிசி வாங்க வந்துள்ளோம், அரசாங்கம் சொல்கின்றது அரிசி உள்ளது என்று, இங்கு வந்து பார்த்தால் அரிசி இல்லை, விலை கூடிய அரிசியே உள்ளது. 240 ரூபாய் 260 ரூபாய் என்கின்றனர், அரிசி விலை கூடுகின்றதோ தவிர குறைகின்றது இல்லை. அரிசிக்கு சரியான தட்டுப்பாடாக உள்ளது, நாங்கள் எங்களது நாட்டு அரிசிக்கு பழக்கப்பட்டுள்ளோம், இந்தியா இருந்து அரிசி வர போகின்றதாம் , இந்தியா அரிசி பற்றி எங்களுக்கு தெரியாது” என்றார் ஒரு நுகர்வோர்.
இதே வேளை மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள மற்றும் ஒரு வர்த்தகரிடம் நாம் இது குறித்து வினவிய போது.”அரசாங்கம் சொல்லும் விலைக்கு எமது வியாபாரிகளுக்கு அரிசி கிடைப்பதில்லை, மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் நாம் ஏறாவூர் , பொலன்னறுவை போன்ற இடங்களில் இருந்து அரிசிகளைப் பெற்றுக் கொள்கின்றோம். அவர்கள் அரசாங்கம் சொல்லும் விலைக்கு அவர்கள் தர முடியாது என்கின்றனர், இதுதான் விலை விருப்பம் என்றால் எடுங்கள் என்கின்றனர்”
“சில அரிசி ஆலை உரிமையாளர்கள் சொல்கின்றனர் நெல் தட்டுப்பாடு என்று, நெல் விலை கூடுகின்றது என்கின்றனர், அரசாங்கம் சொல்லும் விலைக்கு எங்களுக்கு கொடுக்க முடியாது நீங்கள் விரும்பினால் எடுங்கள் என்கின்றனர் என்கின்றனர்.”
மற்றுமொரு வர்த்தகர் தெரிவிக்கையில் : “எங்களுக்கு தேவையான நாட்டரிசி பச்சை அரிசி கடும் தட்டுப்பாடாக உள்ளது. எங்களது பொதுமக்கள் பச்சை அரிசி நாட்டு அரிசிக்கு பழக்கப்பட்டு விட்டனர். அரிசி இறக்குமதி செய்யப்படுமா?அப்படியானால் இறக்குமதி செய்யும் அரசி எந்த வகையில் தரமானது என்பது எங்களுக்கு தெரியாது.”
இறக்குமதி செய்யும் அரிசி வந்தாலும் கூட எங்களுக்கு வழங்குவார்களா? என்று தெரியாது அவர்கள் சத்தோசவுக்கு வழங்க உள்ளனர். என்ன நடக்க போகின்றது என்று எமக்குத் தெரியாது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையிடம் நாம் வினவினோம் – அரிசி தட்டுப்பாடு தற்போது வர்த்தக நிலையங்களில் அதிகரிக்க காரணம் நிர்ணய விலைக்கு அவர்கள் கொள்வனவு செய்ய முடியாமையோ இதற்கு காரணம் எனவும் , கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
