
மக்கள் தமது உறவுகளுக்காக நினைவேந்தல்கள் செய்யும் சந்தர்ப்பத்தில்
அவர்கள் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகுவார்களாகயிருந்தால் அவர்களின் அடிப்படையுரிமை மீறப்படுகின்றது.ஆகவே சுதந்திரமாக நினைவேந்தல்கள் செய்யும் சூழ்நிலையினை உருவாக்கவேண்டும்.அதற்காக பாதிக்கப்பட்ட மக்களின் இனமதபேதமின்றி ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இதேபோன்று யுத்ததிற்கு முன்னரும் பின்னரும் பலர் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டுள்ளார்கள்.தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் ஜனநாயக ரீதியாக நீதிகோரி போராடிவருகின்றனர்.அவர்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கும்,அவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நியாயமான விசாரணைகளுக்காக சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் குரல்கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு சிவில் அமையத்தின் ஏற்பாட்டில் மனித உரிமைகளை வலியுறுத்தும் வகையில் “இப்போது: எமது உரிமைகள், எமது எதிர்காலம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வென்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஜே.கோபிநாத் தலைமையில்
மட்டக்களப்பு மியாணி மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு விசேட அதிதிகளாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன், சிவில் அமையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கண்டுமணி லவகுகராசா, திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் என்.குகேந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பிரதான அரங்க நிகழ்வுகளான மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை மற்றும் விசேட அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.
அதனைதொடர்ந்து, சிவில் அமையத்தின் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் செய்திகள்,சர்வதேச மனித உரிமைகள் கொள்கைகள் குறித்த கண்காட்சி அதிதிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மனித உரிமை சார் மூன்று மாத பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளினால் “இளைஞர்கள் மத்தியில் சமூகப் பிரச்சனையை கையாள்வதற்கான போதிய புரிதல் இளைஞர்களுக்கு உண்டு, இல்லை” எனும் தலைப்பில் நடுவர் எழுத்தாளர் ஜீ.எழில்வண்ணன் அவர்களது மத்தியஸ்தத்தில் விவாத அரங்கு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து இளைஞர் யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமையத்தின் செயற்பாட்டாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது அகம் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறியினை நிறைவு செய்த இளைஞர்கள் இதன் போது சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன்,
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பாக,மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக கடப்பாட்டினை நிறைவேற்றவேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்லாமல் அரசினை வழிப்படுத்துகின்ற ஒரு கடப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது.



























