வீராப்பு பேசும் தமிழ் அரசியல்வாதிகளும் தமது கல்வித்தமையினை வெளிப்படுத்தவேண்டும் -முன்னாள் எம்.பி.ஜனா

Date:


கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள் தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களை உத்தமர்களாக நிரூபித்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என டெலே செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் ஜனா கருணாகரம் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையின் அரசியல் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் கடந்த 15 தொடக்கம் 17ம் திகதிவரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 12 தொடக்கம் மீண்டும் சீனாவுக்குச் செல்ல இருக்கின்றார். இதிலிருந்து இந்திய சீனா அதிகாரப் போட்டியிலே இலங்கை மீண்டும் சிக்கியிருப்பதாகவே உணர முடிகின்றது.
சர்வதேச அரசியல் அவ்வாறு இருந்தாலும் தற்போது ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் வடக்கு கிழக்கு தொடர்பிலும் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.
அத்துமீறிய குடியேற்றங்கள் நிறுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரைப் பிரச்சனை பல வருடங்களாகியும் இன்னும் தீர்க்கப்படவில்லை. தங்கள் ஆட்சியில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் இன்றுவரை ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயத்திற்கும் ஒரு தீர்வைத் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் அதற்கும் எதுவுமே நடக்கவில்லை. வடக்கு கிழக்குப் பகுதிகளிலே ஆயிரக் கணக்கான தனியார் பொதுக் காணிகள் அரச படைகளால் வசப்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் கூட இன்னும் விடுவிக்கப்படுவதாக இல்லை.
ஆனால் தெற்கைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியாக சில விடயங்கள் இடம்பெறுகின்றன. கடந்த கால ஊழல்வாதிகளின் விபரங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்பட்டியல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பொருட்கள் மாயமாக்கப்பட்ட விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தின் எதிர்காலத்தில் தாங்கள் அரசியல் ரீதியில் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுபவையாகவே தெரிகின்றன.
ஆனால் தெற்கிலே பலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு கிழக்கிலே தமிழ் மக்கள் கடந்த இரு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு கணிசமாக வாக்களித்திருக்கின்றார்கள். அந்த வகையில் வடகிழக்கு மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்த வண்ணமே இருக்கின்றது.
இதில் தமிழ் மக்கள் தான் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களிலும், தேர்தல் இல்லாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே கட்சியில் ஒரே கூட்டமைப்பில் கணிசமான மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றிருந்தால் கடந்த ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது தமிழ் மக்கள் தொடர்பான விடயத்தை வேண்டுகோளாக விடுத்த இந்தியப் பிரதமர் அதனை பலமான அழுத்தத்தைக் கொடுத்திருப்பார். எதிர்காலத்திலாவது நாங்கள் இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது தங்கள் கட்சியின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்விமான்கள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் கடந்த அரசாங்கங்கள் போலல்லாமல் கல்விமான்களை உள்ளடக்கியவர்கள் என்ற ரீதியிலே ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று துரதிஸ்டவசமாக கல்விப் பட்டம் விடயத்தில் சபாநாயகர் இன்று இராஜினாமா செய்யும் நிலைக்குச் சென்றிருக்கின்றார்.
உள்நாட்டில் பட்டம் பெற்றவர்களது பட்டப்படிப்புகள் கேள்விக்குட்படுத்தப்படுவதாக இல்லை. ஆனால் வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களின் பட்டங்களே கேள்விக்குட்படுத்தப்படுவதாகவே நான் அறிகின்றேன். சிலவேளைகளில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் காசு கொடுத்துக் கூட கலாநிதிப் பட்டங்கள் பெற்றுக் கொள்ளும் நிலையும் இருக்கின்றது. இதில் அரசியல் வாதிகள் மட்டுமல்ல சில அதிகாரிகளும் கூட இவ்வாறு பெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. அந்த வகையில் வெளிநாடுகளில் பட்டம் பெற்று தங்கள் பெயர்களின் பின்னால் அந்தப் பட்டங்களை இடுபவர்கள் அதனை நிரூபிக்க வேண்டிய காலகட்டமாகவே இது இருக்கின்றது.
இதற்கு முன்னுதாரணமாக பாராளுமன்றம் திகழ்கின்றது. சபாநாயகர் தன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். சஜித் பிரேமதாச கூட சாதாரண தரம் சித்தியடையாதவர் என்ற விடயங்கள் கூறப்பட்ட நிலை அவர் இன்று தனது பிறப்புச் சான்றிதல் முதல் பட்டப்படிப்பு வரையான ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கின்றார். இதே போன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை வெளிக்காட்ட வேண்டும்.
கடந்த காலங்களிலே ஒரு சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள் தாங்கள் தான் கல்விமான்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம் வீரவசனம் பேசியவர்களும் தங்கள் கல்வி தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களை உத்தமர்களாக நிரூபித்தால் அது மிகவும் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...