
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை (17) அதிகாலை முற்றுகையிட்டு சுற்றிவளைத்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்ததுடன் 13 உழவு இயந்திரங்களை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேசர ரத்தின வீர ஆலோசனையில் விசேட அதிரடிப்படை மட்டு அம்பாறை பொலன்னறுவை வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என், குலதுங்க வின் வழிகாட்டலில் அரந்தலாவை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரிகள் சந்தனம் மற்றும் கிஸ்சிறி தலைமையிலான அதிரடிப்படையின் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 2.00 மணிக்கு முந்தனை ஆற்று பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன்போது சட்டவிரோதமாக மண் அகழ்ந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டிருந்த 13 பேரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் 13 உழவு இயந்திரங்களை மணலுடன் மீட்டு கைது செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட உழவு இயந்திரங்களையும் கரடியனாறு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நீண்ட காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச் சாட்டுக்கள் தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


