கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 50,000 இளைஞர்-யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கிரீன் மண்டபத்தில் இன்று (12) நடைபெற்ற ரூமேனியா நாட்டிற்கான வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையில் 7% இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் நம்பிக்கையான நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுசரணையுடன் அப்ரோன் குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். ரூமேனியாவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான நேர்முகத் தேர்வுகள், அந்த நாட்டிலிருந்து வருகை தந்த பிரதிநிதி திருமதி ரொக்சானாவின் தலைமையில் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து சுமார் 350 இளைஞர்-யுவதிகள் இந்த நேர்முகப் பரீட்சையில் கலந்து கொண்டனர். தேர்ச்சி பெற்றவர்கள், எட்டு மாத காலத்திற்குள் ரூமேனியா நாட்டிற்கு வேலைக்காக அனுப்பப்படவுள்ளதாக அப்ரோன் குழுமத்தின் தலைவர் டாக்டர் சிவலிங்கம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அப்ரோன் குழுமத்தின் பிரதம ஆலோசகரும் நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் டன்சான் பாபு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றாக்குறையை தீர்க்க, இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.