(பாறுக் ஷிஹான்)
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு திங்கட்கிழமை (24) சம்மாந்துறையில் அமைந்துள்ள பிராந்திய மார்பு சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.

“ஆம்! எம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்” அர்ப்பணிப்பு, முதலீடு, வழங்கல்
எனும் எனும் தொனிப்பொருளில் பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்.எம்.எம்.ஹனீபா, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் பீ.பிரபாசங்கர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி.அப்துல் வாஜித், பிராந்திய பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட வைத்திய அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கு நிகழ்வின் போது காசநோய் தொடர்பாகவும் அந்நோய்க்கான அறிகுறிகள், அந்நோயிலிருந்து பாதுகாப்பு பெறுதல், சமூகத்தில் காசநோயை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிராந்திய பணிப்பாளர், பிராந்திய மார்பு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோர் விளக்கமளித்தனர்.

அதனைத் தொடர்ந்து “ஆம்! எம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்” எனும் தொனிப்பொருளுக்கு நானும் ஆதரவினை வழங்குகின்றேன் எனும் கருப்பொருளில் கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் வெளிச் சுவரில் கையெழுத்து இடும் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட சகலரும் கையொப்பமிட்டனர்.
உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
