அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பிடியளவு கமநலத்திற்கு என்னும் விவசாய திட்டத்திற்கு அனைத்து திணைக்களங்களும் உதவவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஜெகநாதன் கோரிக்கை விடுத்தார்.

செய்கை பண்ணப்படாமல் கைவிடப்பட்டுள்ள நிலங்களில் இறக்குமதிசெய்யப்படும் விவசாய பொருட்களை உற்பத்திசெய்யும் வகையில் அரசாங்கம் இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அனைவரும் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தமுன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய கூட்டம் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், மத்திய நீர்பாசண திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம்.இப்ராஹீம், மாகாண நீர்பாசன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபோக நெற்செய்கை ஆரம்பம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டியn சயற்பாடுகள் மற்றும் விவசாயிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்தும் கருத்துகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் பெரும்போக செய்கையின்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதன்போது குளங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அவற்றினை விரைவாக புனரமைப்புச்செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக செய்கையின்போது அரசாங்கத்தினால் உரமானியமாக 1,568 மில்லியன் ரூ.59,511 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இம்முறை மத்திய நீர்பாசணம்,மாகாண நீர்பாசண திட்டத்தின் கீழ் சுமார் 80ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்கை பண்ணுவதற்கான எதிர்பார்ப்புகள் காணப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் விவசாயிகளுக்கும் நீர்பாசன திணைக்களத்திற்கும் இடையில் காணப்படும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய எதிர்வரும் மாதம் விசேட கூட்டம் ஒன்றிணையும் நடாத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.