
இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்கு பற்றுனர்கள் அனைவருக்கும் உடல் தளர்வு பயிற்சி நடைபெற்று முதல் விளையாட்டு நிகழ்வாக நீச்சல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சைக்கிள் பவனி ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து விழிப்புணர்வு மரதன் ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு பற்றிய அனைவருக்கும் நினைவு பதக்கம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூர்ய திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் முரளீஸ்வரன், சுகாதார சேவைகள் திணைக்கள கிழக்கு மாகாண பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்தின, கமர்சியல் வங்கியின் கிழக்கு மாகாண கிளையின் முகாமையாளர் கஜரூபன், மட்டக்களப்பு தலைமையாக போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார, சமூகத் தொண்டு நிறுவனங்கள், அரச திணைக்கள ஊழியர்கள், விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மார்பக புற்றுநோய் கண்டறிதல் தொடர்பிலான மருத்துவபரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வும் முன்னெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகுமார்


