பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளருமான டொக்டர் உவைஸ் பாறுக் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நிதின் ரனவக்கவுடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக அம்பாரை, மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் தனுஷியா சிவலிங்கம் வாரத்தில் இரு தினங்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு வருகை தந்து சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளார்.

கடந்த 2025.07.15 ஆம் திகதி முதல் சிறு பிள்ளைகளுக்கான விசேட வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் வாரத்தில் இரு தினங்கள் இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் ஏனைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளும் இந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் எமது கோரிக்கைகளை ஏற்று எமது பிரதேச மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முன்வந்த சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் தனுஷியா சிவலிங்கம் மற்றும் அற்காக உதவி ஒத்துழைப்புக்களை வழங்கிய அம்பாரை, மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சந்திரசேன, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நிதின் ரனவக்க ஆகியோருக்கு பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *