கிருஷ்ணகுமார்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செல்வம் நிறைந்த நாடு அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் கீழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் 1000 பாடசாலைகள் உட்கட்டமைப்பை மேம்படுத்த கல்விக்கான சுத்தமான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி திட்டம் இன்று (21) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (21) போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
இராணுவத்துடன் கைகோர்த்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசசபை,பழைய மாணவர்கள்,பெற்றோர் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய பிரதி அதிபர் த.ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன்,போரதீவுப்பற்று பிரதேசபையின் செயலாளர் கே.பகீரதன்,243 படைப்பிரிவின் சிவில் உத்தியோகத்தர் லெப்ரினன் கேணல் குமார,இலங்கை சிங்க படையணியின் பிரதேச கட்டளை அதிகாரி கேணல் ரணில் வலகல்ல உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது படையினரால் பாடசாலையின் வளாகம் மற்றும் வெளிப்புறப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் பாடசாலையினை அழகுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் பாடசாலையின் சிற்றூழியர்கள் மற்றும் பழைய மாணவர்கள்,பெற்றோரின் உதவியுடன் பாடசாலையில் உடைந்த நிலையிலிருந்த தளபாடங்கள் திருத்தியமைக்கும் பணிகளும் இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.
