பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் கீளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (16) கல்முனை கடற்கரை பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டது.

கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த இச் சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம் ராபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கு இவ் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வில் பொலிஸ்,விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள்,சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
