மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோத மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பன்சேனை, நல்லதண்ணிஓடை – அடச்சகல் சந்தி பகுதியிலுள்ள விவசாய காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் காட்டு யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியதில் முதலைக்குடாவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் (வயது 39) எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கள்கிழமை (03.02.2025) அதிகாலை 2.00 மணியளவில் மூன்று விவசாயிகள் யானையை விரட்டுவதற்காக சென்று திரும்பி வரும் போது விவசாயி ஒருவர் தனது காணியில் சட்டவிரோதமான முறையில் அமைத்திருந்த யானை பாதுகாப்பு மின்சார கம்பியில் சிக்கியதில், ஸ்தலத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாதப் பகுதியில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *