காட்டு யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கொம்பர்சேனை வயற்பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று (11)அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பாலர்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த எட்டு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய சின்னத்தம்பி கந்தசாமி என்பவரே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.
இவர் தனது விவசாய நிலத்தில் நெல்வேளாண்டை அறுவடையின் பின்னர் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருந்தவேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம்.நசிர் கரடியனாறு பொலிஸ் அதிகாரியுடன் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தார்.

மரணமடைந்தவர் வயல் வாடியில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தவேளை அதிகாலையில் காட்டு யானை பயிர்களை துவம்சம் செய்துவிட்டு வாடிக்குடிசையை முற்றாகச் சேதப்படுத்திய பின்னர் விவசாயியை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாடியில் தங்கியிருக்கும் இவர் மாதத்திற்கு ஒரு தடவையே வீட்டிற்கு வந்துசெல்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (10) இவரது கைத்தொலைபேசி இயங்காகததனால் இன்று (11) காலை அவரது குடும்ப உறவினர்கள் பார்க்கச் சென்றபோது வாடிக்குடிசை முற்றாக அழிக்கப்பட்டு இவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *