கிருஷ்ணகுமார்
இந்த நாட்டில் இறக்குமதியினை கட்டுப்படுத்த ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிகைகளை முன்னெடுத்துவருவதாக வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்த்தன இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் அமைக்கப்பட்டு இதுவரையில் முறையாக பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அங்குள்ள நிலைமைகள் குறித்து பார்வையிட்டார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரன்,களுவாஞ்சிகுடி பிரதேச உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அமைச்சு,திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பயிர்ச்செய்கையாளர்களைக்கொண்ட பகுதிகளில் ஒன்றான களுதாவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த பொருளாதார மத்திய நிலையில் 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

எனினும் கடந்த காலத்தில் இவை முறையான திட்டமிடல்கள் இல்லாமல் முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமலும் இருந்துவருகின்றது.
இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பொருளாதார மத்திய நிலையத்தினையும் இயங்கச்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தினை செழிப்பான மாவட்டமாக கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தி கட்சியன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்.