
மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி புனையப்பட்ட உறுதிகள் மூலம் அடாத்தாக தனிநபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த காணி தொடர்பில் மீண்டும் குறித்த தனிநபர்களிடமிருந்து மீட்பதற்காக பல துறை சார்ந்தவர்கள் உள்வாங்கப்பட்ட மலாக்கா காணி மீட்பு செயலணி என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் மௌலவி அஹமது அன்ஸார் மௌலானா தலைமையிலான மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபைக்கு முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தது.
இதில் போலியாக புனையப்பட்டு குறித்த காணி உறுதிகளை தங்களின் பெயர்களில் சட்டவிரோதமாக வைத்திருக்கும் நபர்களிடம் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை மலாக்கா காணி மீட்பு செயலணி கேட்டிருந்தது.
இதற்கமைய குறித்த காணியை அடாத்தாக வைத்திருக்கும் நபர்களுடனான கலந்துரையாடல் முடிவினை ஒரு அறிக்கை வடிவில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா ஒன்று கூடி செவ்வாய்க்கிழமை (21) இரவு மலாக்கா காணி மீட்பு செயலணியிடம் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து கையளித்தது.இதனை மலாக்கா காணி மீட்பு செயலணி பொறுப்பாளர்கள் பெற்றுக்கொள்வதை படத்தில் காணலாம் .
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை பகுதி மக்களுக்காக மேட்டுவட்டை பிரதேசத்தில் கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையினால் காவுகொள்ளப்பட்டு முற்றாக அழிந்து போன அரச வைத்தியசாலையையும் பொது நிறுவனங்களையும் கட்டி எழுப்புவதற்கும் சுனாமியினால் இருப்பிடங்களை இழந்த அகதிகளுக்கு வீடுகளைக்கட்டிக் கொடுப்பதற்கும் மலேசியா நாட்டில் உள்ள மலாக்கா தொண்டு நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட காணி தற்போது புனையப்பட்ட உறுதிகளினால் சில தனிநபர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இதனடிப்படையில் குறித்த காணியை மீண்டும் மீட்டு பொதுமக்களின் தேவைக்காக பயன்படுத்துவதற்காக மலாக்கா காணி மீட்பு செயலணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்


