பாறுக் ஷிஹான்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினமான இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவிலான பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் செயலகத்தை சுற்றி குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலப்பகுதி இன்று (20) நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்துள்ளது. நண்பகல் 12.00 மணி முதல் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை செயலகத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் ஆதரவாளர்கள் பெருமளவிலானோர் அம்பாறை மாவட்ட செயலகத்தை நோக்கி திரண்டுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கடமைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த ஊழியர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விசேட அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னரே மாவட்ட செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு அப்பால் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு வரும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டன. விசேட வீதிப் போக்குவரத்துதில் நடமாடும் பொலிசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று (20) நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்ட செயலகத்தை அண்டிய முக்கிய சந்திகள் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளில் இடையே பாதுகாப்பு காவலரண் தற்காலிகமாக அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான முன்னேற்பாடுகளை அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமூத்ரஜீவ தலைமையில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.