முல்லைத்தீவு இளைஞர் மரணத்திற்கு நீதி கோரி ஹர்த்தால்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு வடகிழக்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் எதிர்வரும் புதன்கிழமை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஆதரவு வழங்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.
கபில்ராஜ்ஜுக்கு நடந்த இந்த சம்பவம் நாளை சாணக்கியனுக்கும் நடைபெறலாம் இந்த மாவட்டத்தில் இருக்கும் எவருக்கும் நடக்கலாம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற எந்த தமிழருக்கும் நடக்கலாம். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் அலட்சியமாக இருப்போமானால் இது எதிர்வரும் காலங்களில் எங்களுடைய ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் தொடர்ந்தும் ராணுவ கெடுபிடியை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்ற செய்தியை சொல்லுகின்ற விடயமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இளைஞர்கள் 66-ஆம் பிரிவு ராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் அந்த இடத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் செய்தியில் வந்திருந்தது.
அந்த செய்தியை பார்த்தபோது உடனடியாக நாங்களும் இது சம்பந்தமாக சர்வதேச சமூகமும் அதே போன்று வெளிநாடு தூதுவர்கள் அனைவரிடமும் ஒரு அவசரமான ஒரு விடயமாக பார்க்க வேண்டும் என்பதனை அறிவித்திருந்தோம் அதனைத் தொடர்ந்து நேற்றைக்கு முன்தினம் நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து ஒரு இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டதாக செய்திகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதில் ஒரு அபாயமான நிலை ராணுவத்தினால் தமிழ் இளைஞர்களை அடித்து கொலை செய்யும் அளவிற்கு 2025 ஆம் ஆண்டிலும் இருக்கின்றது ஒரு பாரதூரமான ஒரு விடயம். நாங்கள் இந்த பாரதூரமான விடயத்தை அதனோடு சேர்த்து இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது. ஆனால் மிக முக்கியமாக இந்த பாரதூரமான விடயத்தை கண்டித்து இது சம்பந்தமாக உலக நாடுகளுக்கு இதனைக் கொண்டு செல்லும் முகமாக எதிர்வரும் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது.
15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இந்த ஹர்த்தால் போராட்டத்தை வடக்கு கிழக்கு பூராகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்புகள் நாங்கள் விடுத்திருக்கின்றோம் அந்த அழைப்புதல் சம்பந்தமாக பேசுவதற்காக தான் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.
உண்மையில் இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடாக அறியக்கூடிய தகவலாக இருந்தது எதிர்மனசிங்கம் கபில்ராஜ் என்பவர் 32 வயது அடைந்தவர் அவருக்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் இவர்கள் இந்த முல்லைத்தீவு மாவட்டத்திலே ராணுவ முகாமில் தாக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் எங்களுக்கு கூறியிருக்கின்றார்கள். இதிலே பல்வேறு செய்திகள் வருகின்றது அவர்கள் அந்த இடத்திற்கு ஏன் சென்றார்கள் எதற்கு சென்றார்கள் என்றெல்லாம் நாங்கள் இவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இதனை அடிப்படை பிரச்சனை என்ன என்றால் ஒரு தமிழ் இளைஞர் ஒருவர் ராணுவத்தினரால் தாக்கப்பட்ட சடலமாக ஒரு குளத்தில் அவர் மீட்கப்பட்டிருக்கின்றார். இதுதான் இதனுடைய முக்கியமான ஒரு விடயம்.
ஒரு நாட்டினுடைய தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழர்களை 2025 ஆம் ஆண்டிலும் கூட ராணுவம் அடித்து கொள்ளுகின்ற அளவிற்கு இருக்கின்றது என்றால் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு எந்த அளவு தூரம் பாதுகாப்பு இருப்பது என்பதை பற்றி மீண்டும் நாங்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும். இது ஒரு சாதாரண விடயமாக சிலர் கடந்து போகலாம் ஆனால் இது ஒரு சாதாரணமான விடயம் அல்ல இதை போன்று ராணுவ முகாம்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது. இதுபோன்று ஒரு சம்பவம் தென்னிலங்கையில் எங்கேயாவது இடம் பெற்று இருக்கின்றதா?
தென் இலங்கையில் நடந்திருந்தால் இன்று அந்த பிரதேசங்கள் எல்லாம் காரிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் ஏனென்றால் சிங்கள மக்களை சிங்கள ராணுவம் அடித்து கொன்றால் அவ்வாறு ஏற்படும். ஆனால் ஒரு தமிழ் இளைஞரை சிங்கள ராணுவம் அடித்து கொலை செய்யும் போது இந்த விடயத்தை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் இனமும் மௌனமாக இருக்காமல் நாங்கள் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகுமார்
