கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா நேற்று மாலை (22.01.2025) மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
தூதுவருடனான அதிகாரிகள் குழுவினர், மட்டக்களப்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் சமய தலங்களை பார்வையிட்டதோடு, குறிப்பாக மிகவும் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையை சிறப்பாக ஆராய்ந்தனர்.
பார்வையின் போது, தூதுவர் மட்டக்களப்பின் பிரத்தியேகங்களையும் சிறப்பம்சங்களையும் குறித்து கேட்டறிந்து கொண்டதோடு, இவ்விஜயத்தால் அவர் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், தூதுவர் மற்றும் குழுவினர் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்ததோடு, அங்குள்ள பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.










