அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல் புனித மரியாள் தேவாலயத்தில் உள்ள அருட்தந்தையின் சமாதியில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சிவபாலன் குருக்கள்,ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ உட்பட அருட்தந்தையர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சமாதியிலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றன.

1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு எதிராக இவர் துணிந்து களத்தில் நின்று குரல்கொடுத்துவந்தார்.

அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டதுடன் ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளுக்கு எதிராகவும் செயற்பட்டுவந்தார்.

வடகிழக்கில் நீதிக்காகவும் உண்மைக்காகவும் 11அருட்பணியாளர்கள் தமிழர் தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *