பாறுக் ஷிஹான்
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில், நாபீர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள பிரதேச சபைகளில் தனித்து போட்டியிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி துல்சான் தெரிவித்துள்ளார்.

இன்று (26) சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஆட்டோ சங்கங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், துல்சான் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்டம் முழுவதும் உள்ள பிரதேச சபைகளில் தனித்து போட்டியிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், அனைத்து பிரதேச சபைகளிலும் வேட்பாளர்களை இறக்கி வெற்றி பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம். இந்த முயற்சியில் வெற்றி அடைந்து, அரசியலில் நமது இடத்தை உறுதி செய்யுவோம்” என்றார்.

இதன் பின்னர், கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைத்து சங்கங்களின் உறுப்பினர்களும் எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் முழுமையாக வென்றெடுப்பதற்காக கடைசி வரை போராடுவோம் என்று உறுதி தெரிவித்தனர்.

மேலும், இந்த கூட்டத்தின் போது, ஆட்டோக்கள் நிறைந்து போக்குவரத்து சற்றுநேரம் தடைபட்டாலும், பின்னர் உடனடியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டு வழமையான நிலைக்கு வந்தது.

இதன் பின்னர், சம்மாந்துறை பிரதேசத்தின் அனைத்து ஆட்டோ சங்கங்களின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஆட்டோ சங்கங்களின் ஏக ஆலோசகரான சட்டத்தரணி ஏ.எ. நஸீல், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு தனது கருத்துக்களை வழங்கினார்.