கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14பிரதேச செயலகப்பிரிவுக்குமான பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (27) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்: வேலைத்திட்டங்கள் மேலாய்வு மற்றும் திட்டமிடல்:தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டமிடுவது முக்கியமாக கூறப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி: வைத்தியசாலையின் பரப்பளவு விரிவாக்கம், குறைபாடுகள் தீர்வு மற்றும் முக்கிய மருத்துவ உபகரணங்கள் (எம்ஆர்ஐ ஸ்கானர் உள்ளிட்டவை) வாங்குதல் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வெள்ள மேலாண்மை மற்றும் வடிகால் சீரமைத்தல்:மழை காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

மாநகரசபையின் செயற்பாடுகள்: நகர மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஆராயப்பட்டதுடன், பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பை வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டம், மாவட்டத்தின் சுமுகமான நிர்வாகத்திற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
மட்டக்களப்பு மாவட்டம் எதிர்காலத்தில் மேலும் முன்னேறிட இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

மேலும் இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம்,மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி உட்பட திணைக்கள தலைவர்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.