
சமூக சேவை உத்தியோகத்தர் நியமனம் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என தெரிவித்து சமூக சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கம் இன்று (19) மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸை சந்தித்து சமூக சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் ஏ.ஜீ.அர்ஸாத் தொழிற்சங்க உயர்பீட உறுப்பினர் ஏ.அஹமட் சபீர் ஆகியோர் முறைப்பாட்டினை வழங்கினர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொது செயலாளர் ஏ.ஜீ.அர்ஸாத்
சமூக சேவை உத்தியோகத்தர் சேவை என்பது சமூகத்தில் நலிவடைந்த மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் அத்தியாவசிய பணிகளை ஆற்றிவரும் மிகமுக்கியமான சேவையாகும்.
ஆனாலும் இப்பதவிக்கான ஆட்சேர்ப்பு 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறாமையினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள 44 பிரதேச செயலகங்களில் 21 பிரதேச செயலகங்களில் வெற்றிடம் ஏற்பட்டு எமது பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பல முறைப்பாடுகளை எமது தொழிற்சங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியும் கூட அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையை அடுத்து குறித்த தொழிற்சங்கம் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டில் சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் மாகாண பொது சேவை ஆணைகுழுவால் கோரப்பட்டும் அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுக்காமையினாலும் அதையடுத்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் அரச சேவையில் பணியாளர்களை உள்வாங்குவது தொடர்பான மட்டுபாடுகளினால் அப்போது கைவிடப்பட்டிருந்தது.
எவ்வாறெனிலும் சமகாலத்தில் வடக்கு மாகாணத்தில் இதே பதவிக்காக வடமாகாண பொதுசேவை ஆணைக்குழு குறித்த ஆட்சேர்ப்பை செய்திருந்ததோடு கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக மாகாண பொது சேவை ஆணைக்குழு செயலாளரிடம் நாம் பல தடவை முறையிட்ட போது ஆட்சேர்ப்பு தொடர்பாக அரசின் புதிய கொள்கை படி திறைசேரி செயலாளரின் அனுமதி பெற வேண்டியிருப்பதால் சுகாதார, சமூக சேவை அமைச்சின் செயலாளர் அவற்றை பெற்று தரும் பட்சத்தில் குறித்த சேவைக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சையை நடத்த முடியும் என கூறினார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் முதலமைச்சின் செயலாளர் ஆகியோரிடமும் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடமும் பல முறைப்பாடுகளை மேற்கொண்ட போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாமையினால் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளோம்.
குறித்த ஆணைக்குழுவின் தீர்ப்பின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இவ்வாண்டுக்குள் எமது சேவைக்காக புதிய உத்தியோகத்தர்கள் உள்வாங்க படுவர் என எதிர்பார்கிறோம் என அவர் தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்