கிருஷ்ணகுமார்
இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினை தொடர்ந்து பேணவும் முரண்பாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களை இனங்கண்டு அவற்றினை இல்லாமல்செய்து சமூக ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டினை அணிதிரட்டுதல் என்னும் தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகம்,யாழ் பல்கலைக்கழகம்,சப்ரகமுவ பல்கலைக்கழகம்,ருகுணு பல்கலைக்கழகம் என நான்கு பல்கலைக்கழகங்களை இணைத்து அதனுடன் அந்தந்த மாகாணங்களில் உள்ள மாவட்ட செயலகங்களை இணைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் தேசிய சமாதானப்பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன்,உதவி அரசாங்க அதிபர், தேசிய சமாதான பேரவையின் சார்பில் பேராசிரியர் ஜெயசிங்கம்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள்,பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், தேசிய சமாதான பேரவையின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுசெய்யப்பட் இனநல்லிணக்கம் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு முன்வைக்கப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இன,மத நல்லிணக்கத்தினை பேணும் வகையிலான சமூகம் ஒன்றிணை கட்டியெழுப்பும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.