தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பயணிக்கவேண்டும்

Date:

கிருஷ்ணகுமார்

இந்த நாட்டில் சிங்கள தலைவர்கள் என்பது வலதுசாரியாகயிருந்தாலும் இடதுசாரியாகயிருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு ஊடகப்பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பயணிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் விடுத்துள்ள அழைப்பினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் நடைபெற்றதுள.இதனை தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்வி எங்களிடமிருந்தது.இந்த பேரவையின் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்துகள் தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஏமாற்றமானதாகவேயிருந்தது.
இறுதி யுத்ததின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் அவலங்கள் தொடர்பாகவும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான பொறுப்புக்கூறலை பார்க்கின்றபோது அமைச்சரின் கருத்து ஏமாற்றத்தினையளித்தது.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியானாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்றாலும் இந்த கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்பட்டதைவிட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளேயிருந்தது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் பார்க்கின்றபோது இறுதியுத்ததில் நடைபெற்ற விடயங்களின் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்,உண்மைகள் கண்டறியப்பட்டால் அதற்கான நீதிகள்,பரிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.அவை வழங்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால் வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துகளை பார்க்கின்றபோது அவர் உள்நாட்டு பொறிமுறையின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற அடிப்படையிலும் காணாமல்ஆக்கப்பட்டோர் அலுவலகம்,இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக உள்ளக பொறிமுறையினை பயன்படுத்தி இறுதி யுத்த விடயங்களை கையாளலாம் என்று சொல்லியுள்ளார்கள்.

தமிழ் மக்களை பொறுத்த வரையில் யுத்தம் நிறைவுபெற்று 16ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உள்ளபொறிமுறை எங்களுக்கு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை.

விஜயதாச ராஜபக்ஸ அமைச்சராகயிருந்த காலப்பகுதியில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்கி கோவையினை மூடிவிடலாம் என்று கருதினார்கள் அதுவெற்றியளிக்கவில்லை.

சிங்கள தலைவர்களைப்பொறுத்த வரையில் வலதுசாரி கட்சிகள் என்றாலும் இடதுசாரி கட்சிகள் என்றாலும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகள் என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை தருகின்றது.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதை விட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது குற்றவாளிகள் காணப்படும் நாடாக இது காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.அவர் பாதாள உலக குழுக்களையும் ஏனைய குழுக்களையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம்.ஆனால் இறுதி யுத்ததின்போது அழிவுகளை ஏற்படுத்திய படையினர் குறித்தோ அதிகாரிகள் குறித்தோ அங்கு பேசவில்லை.

சிங்கள தலைவர்களைப்பொறுத்த வரையில் வலதுசாரி கட்சிகள் என்றாலும் இடதுசாரி கட்சிகள் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் தமது படையினரை எவ்வாறாவது பாதுகாக்கவேண்டும் என்று செயற்படுகின்றனர்.குற்றமிழைக்காத படையினரை பாதுகாப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கமுனைவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.இங்கு சில படையினருக்கு அதிகாரிகளுக்கு பாதாள உலகுடன் தொடர்பு உள்ளது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.ஆகவே இப்படி செயற்படக்கூடிய பொலிஸாராக இருக்கலாம் அல்லது படையினராக இருக்கலாம் இவர்கள் இறுதி யுத்தத்தில் குற்றமிழைத்த விடயத்தில்கூட படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. பாதிக்கப்பட்டது தமிழர்களாக இருக்கின்றபடியால் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களப்படையினராக இருக்கின்றபடியால் அவர்களை பாதுகாக்கவேண்டுமென்ற நோக்கில் செயற்படுகின்ற போக்கினை காணக்கூடியதாக இருக்கின்றது.

எனவே புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் நீதிப்பரிகாரத்தை வழங்குவதற்குமென்று வந்தவர்கள் ஜெனிவா 58ஆவது கூட்டத்தொடரில் அவர்களுடைய கருத்துக்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற பாங்கில் அமைந்திருக்கின்றது. பொறுப்புக்கூறுகின்ற விடயத்தில் புதிய அரசாங்கம்கூட முன்னேற்றகரமான திசையை நோக்கிப் பயணிப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

வாகரை பிரதேசத்தில் வனஇலாகா செயற்பட்ட விதமானது ஒரு மிருகத்தனமாக செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.அவர்கள் வேறு இடங்களிலிருந்துவந்து குடியேறிய அந்நியநாட்டு பிரஜைகள் அல்ல.அந்த மக்கள் அங்கு வாழ்ந்திருக்கின்றார்கள்,பயிர்செய்திருக்கின்றார்கள்.அந்த இடத்தில் கண்மூடித்தனமான வகையில் வனஇலாகா அதிகாரிகள் செயற்பட்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல இது தொடர்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது தீவைத்தது தொடர்பில் கேள்வியெழுப்பியபோது வனஇலாகா பகுதிக்குள் வந்தால் தீவைப்பது சர்வசாதாரண விடயம்போல வனஇலாகா அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.எங்களை சுட்டுக்கொல்வீர்களா என்று அங்குவந்த மக்கள் கேள்வியெழுப்பியபோது எமது எல்லைக்குள் வந்தால் அதுவும் செய்ய தயார் என்று கூறியுள்ளனர்.இந்த கருத்து என்பது ஒரு சர்வாதிகாரமான பொறுப்பற்ற கருத்தாக காணப்படுகின்றது.இது தொடர்பில் வனஇலாகாவின் உயர் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லயிருக்கின்றோம்.

நாமல் ராஜபக்ஸ போன்றவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இரண்டு ஆசனங்களுடன் இருக்கின்றார்கள்.கடந்தமுறை 144ஆசனங்களுடன் இருந்தவர்கள் இன்று இரண்டு ஆசனங்களுடன் இருக்கின்றார்கள்.கடந்த காலத்தில் இவர்கள் நாட்டினை எவ்வாறு கொண்டுசென்றார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் ஆட்சியமைத்து இரண்டு வருடங்களில் சிங்கள மக்களே அவரை அடித்து கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

மக்கள் பட்டகஸ்டங்கள் அனைவருக்கும் தெரிந்தவிடயம்.நாமல்ராஜ பக்ஸ நாட்டை தங்களிடம் ஒப்படைக்குபடி கூறுவதும் நாட்டினை கையேற்க தயாராகயிருக்கின்றோம் என்னும் கருத்தானது வேடிக்கையான கருத்தாகவே இருக்கமுடியுமே தவிர அவர்களுக்கு நாட்டினை முன்கொண்டுசெல்லும் யோக்கியதையை அவர்கள் கொண்டிருக்கவில்லை அவர்கள் அதனை இழந்திருக்கின்றார்கள்.நாட்டினை வங்குரோத்த நிலைக்கு கொண்டுசென்றவர்கள் மீண்டும் நாட்டினை கையாள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் துளியளவும் இல்லை.அவர்கள் நாட்டினை பொறுப்பேற்கவுள்ளோம் என்ற கருத்தானது நகைச்சுவையான கருத்தே தவிர அது சாத்தியமில்லை.

நாங்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக மாத்திரம் பிரிந்துசெயற்பட்டு தேர்தலுக்கு முகம்கொடுத்து ஆசனங்களை எடுத்துவிட்டு பின்னர் ஒருங்கிணைத்து ஆட்சியமைக்கலாம்.தென்னிலங்கை இனவாத கட்சிகளுடன் இணையாமல் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கலாம் என்ற கருத்துதான் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலை எதிர்பார்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் மக்களின் எண்ணம் சிறுபான்மை மக்களாகயிருக்கின்ற நாங்கள் சிதறிக்கிடக்காமல் இணைந்துசெயற்படவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதனை வடக்கு தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

பதில் தலைவராகயிருக்கின்ற சி.வி.கே.சிவஞானம் அவர்கள் சிந்தித்திருக்கவேண்டும்.அவர் தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம்,கூட்டாக பயணிப்போம் என்று சொன்ன விடயம் என்பது வரவேற்கத்தக்கவிடயம்.கடந்தகால தேர்தல்களின்போது நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இருக்கின்றன.

வடக்கில்கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் இருக்கின்றது.வேட்பாளர் தெரிவுசெய்த முறைமை,வேட்பாளரை நிறுத்திய முறைமைகளை தமிழ் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.மக்கள் வழங்கிய தீர்ப்பானது பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் அவர்களை சிந்திக்கவைத்துள்ளது.

எனவே அவர் தமிழ் கட்சிகளை ஒன்றிணைந்து பயணிக்கவேண்டும் என்பதை நான் வரவேற்கின்றேன்,நல்ல விடயமாக பார்க்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...