பாறுக் ஷிஹான்
கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியதால், கல்முனை தலைமையக பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (13), அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட குறித்த நபர், விசாரணை முடிந்த பின்னர் பிணை வழங்கப்பட்டார்.
எனினும், பிணையாளிகள் இன்மையால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே சிறைக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அதே நேரத்தில், குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி, நீதிமன்ற சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக காண்முகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
தப்பிச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதானவராக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.