கேரளா கஞ்சா பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு

பாறுக் ஷிஹான்

கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் உள்ள கட்டிலின் கீழ் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை(10) கல்முனை விசேட அதிரடிப்படையினரால் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவுடன் 33 வயது சந்தேக நபர் கைதாகிய நிலையில் செவ்வாய்க்கிழமை(11) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதன் போது கல்முனை நீதிமன்ற நீதிவான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆந் திகதி 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தி பின்னணி

50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரை கடந்த திங்கட்கிழமை (10) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது கடந்த புதன்கிழமை(5) பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான இரு சந்தேக நபர்களிடம் தடுப்புகாவலில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க ஒராபி பாஸா வீதியை சேர்ந்த முஹம்மது கனீபா முஹமட் ஆசாத் என்ற வீட்டு உரிமையாளர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவும் வீட்டில் உள்ள கட்டிலின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும் கைதான சந்தேக நபர் உட்பட 50 இலட்சத்திற்கும் பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *