கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று,ஏறாவூர் நகர் ஆகிய பிரதேசசபை,நகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் செங்கலடி ஐயங்கேணியில் நடைபெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏறாவூர்ப்பற்று பிரதேசபைக்கான வேட்பாளர் செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன்,இரா.சாணக்கியன்,இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வேட்பாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தமிழ் தேசிய பற்றாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வட்டார வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.
நாங்கள் பல ஆண்டுகளாக உரிமைக்காக போராடிய இனம்,பல இழப்புகளை எதிர்கொண்ட இனம். அந்தவகையில் எமக்கான உரிமையினை பெறும் வரையில் தமிழ் தேசிய அரசியல் என்பது பலமானதாக இருக்கவேண்டும்.
கிருஷ்ணகுமார்