மட்டக்களப்பு – ஏறாவூர் போக்குவரத்துக்கு மிகவிரைவில் குளிரூட்டப்பட்ட இரண்டு பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கைப் போக்குவரத்துச்சபையின் தலைவர் ஜீவக்க பிரசன்ன புறசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல போக்குவரத்து வீதிகள் நீண்டகாலமாக நட்டத்தில் இயங்கி வருகின்ற வேளையில் ஏறாவூர் வீதியில் பல வருடகாலமாக மிகுந்த இலாபத்துடன் இயங்குவதுடன் இரண்டு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையினை வாங்கி வைத்துள்ளமை பெருமையளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஏறாவூர் பேர்க்குரத்து வீதியின் ஊழியர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா போனஸ் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான சிபாரிசு செய்யப்படுமென்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் ஜீவக்க பிரசன்ன புறசிங்க ஏறாவூர்ப் போக்குவரத்து வீதிகளை பார்வையிடுவதற்கான களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.
சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் விஜித தர்மசேன, பிராந்திய பாதுகாப்பு முகாமையாளர் எம். மர்ஜுன் மற்றும் உதவி முகாமையாளர்களும் இதன்போது இணைந்திருந்தனர்.
ஏறாவூர்ப் போக்குவரத்து வீதி அமைக்கப்பட்டு முப்பது வருடகாலத்தைக் கடந்துள்ளபோதிலும் இதுவரை நிர்வாகக் கட்டடம் இல்லாமையினால் தற்காலிகக் கட்டடம் ஒன்றிலேயே இயங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் வீதிக்கு நிர்வாகக் கட்டடம், குளிரூட்டப்பட்ட இரண்டு பஸ்கள் மற்றும் சாரதிகள் எழுவர் தேவையுள்ளதாக கோரப்பட்ட மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.