
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் மீனவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் இன்று (05) காலை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை (03) திருக்கடலூர் பகுதியில் இருந்து வாழைச்சேனை கடற் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருக்கடலூர் படகு மற்றும் மீனவர் மீது இன்னுமொரு படகில் வந்த இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யகோரியும் இன்றையதினம் (05) திருக்கடலூர் பகுதியில் திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?”, “மீனவனின் குரல் அரசுக்கு கேட்காதா?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.