
மன்னார் காற்றாலை திட்டம் உட்பட கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை காந்திபூங்காவில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மக்களின் வாழ்வாதாரத்தினையும் இயற்கை சமநிலையினையும் பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துக என்ற தொனிப்பொருளிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை மக்களின் நிலங்களை பறித்து அந்நிய நாடுகளுக்கு வழங்குவதா அபிவிருத்தி?,இயற்கையினை பாதிக்கும் அபிவிருத்தி திட்டங்கள் வேண்டாம்,காற்றாலைக்காக பறவையினங்களை அழிக்கலாமா,மயிலத்தமடு மாதவனையையும் தாரைவார்க்கும் நோக்கமா?,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து முன்னெடுக்கப்படும் இயற்கையினை அழித்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டத்தினையும் வடகிழக்கில் முன்னெடுக்க அனுமதிக்கமுடியாது என இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் ஜனநாயக ரீதியாக மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடாத்திவருவோரை பொலிஸார் தாக்கியமை அச்சுறுத்தியமை என்பது வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அச்சுறுருத்தலாகவே கருதுவதாகவும் ஆட்சிகள் மாறினாலும் அவர்களினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் தொடர்வதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில்,கதிரவெளி,குச்சவெளி,மூதூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கனியமணல் அகழ்வுகளும் மக்களுக்கு ஆபத்தானது எனவும் திருகோணமலையில் முத்துநகர்,சம்பூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சூரிய மின்சக்தி திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தினையும் விவசாயத்தினையும் அழிக்கும் திட்டங்கள் தேவையற்றுத எனவும் அனைத்தும் நிறுத்துவதற்கு அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கிருஷ்ணகுமார்